நீலகிரியில் அணைகளில் நீர்மட்டம் குறைந்தது


நீலகிரியில் அணைகளில் நீர்மட்டம் குறைந்தது
x
தினத்தந்தி 22 Aug 2021 10:01 PM IST (Updated: 22 Aug 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் குறைந்தது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் குறைந்தது.

நீர்மட்டம் குறைவு

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரிய கட்டுப்பாட்டில் பைக்காரா, கிளன்மார்கன், காமராஜ் சாகர், கெத்தை, எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி, மாயார், குந்தா உள்பட 13 அணைகள் உள்ளது.

 இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு 12 மின் நிலையங்களில் நாளொன்றுக்கு 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கிருந்து திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஏப்ரல், மே மாதங்களில் பெய்ய வேண்டிய கோடை மழை மற்றும் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. 

இதனால் அணைகளில் நீர்மட்டம் குறைவாக காணப்படுகிறது. பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 65 அடிக்கும், 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணையில் 80 அடிக்கும், எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவான 184 அடியில் 82 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.

மின் உற்பத்தி

அணைகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்வதால் மின் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதனால் தற்போது தினமும் 300 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை சராசரியாக பெய்யாவிட்டால் தொடர்ந்து மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் உள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் மின்வாரிய அணைகளில் நீர்மட்டம் பாதிக்கும் கீழ் குறைந்து இருக்கிறது. இதனால் மின் உற்பத்தி குறைவாக உள்ளது. அணைகளில் இருக்கும் தண்ணீரை கொண்டு இன்னும் ஒரு மாதம் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும். தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே மின்உற்பத்தி சீராக இருக்கும் என்றனர்.

Next Story