சினிமா தியேட்டர்கள் சுத்தம் செய்யப்பட்டன
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப் பட்டதை யொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று சினிமா தியேட்டர்கள் சுத்தம் செய்யப்பட்டன.
திருவாரூர்:
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப் பட்டதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று சினிமா தியேட்டர்கள் சுத்தம் செய்யப்பட்டன.
ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய- மாநில அரசுகள் அமல்படுத்தியது. இந்தநிலையில் மக்கள் நலன் கருதியும். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு கட்ட தளர்வுகளை அறிவிக்கப்பட்டன. ஊரடங்கு காரணமாக
கடந்த 4 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் வேலையின்றி தவித்தனர். சினிமா தியேட்டர் உரிமையாளர்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டது.
சுத்தம் செய்யும் பணி
எனவே தியேட்டர்களை நம்பி உள்ள ஊழியர்கள் உள்பட அனைவரையும் பாதுகாக்க தியேட்டர்களை விரைவில் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத ரசிகர்களுடன் கட்டுப்பாடுகளை கடைபிடித்து தியேட்டர்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் 2 சினிமா தியேட்டர்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்பட மாவட்டம் முழுவதும் 9 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இதில் திருவாரூர் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு சினிமா சினிமா தியேட்டரில் இருக்கைகள், தரை உள்பட அனைத்து பகுதிகளையும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். மேலும் தியேட்டர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அனைத்து வித பாதுகாப்பு வசதிகளும் முழு வீச்சில் நடைபெற்றது.
முககவசம்
இதுகுறித்து சினிமா தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:- , தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அரசு அனுமதி வழங்கிய நிலையில் சினிமா நிறுவனங்களில் இருந்து படங்கள் திரையிடப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், ஒரு சில நாட்களில் படங்கள் திரையிடப்படும். தியேட்டர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் அவசியம் முககவசம் அணிந்து வர வேண்டும்.
நுழைவுவாயிலில் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் தியேட்டர்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அரசு வழிகாட்டுதல் முறைகளை ரசிகர்கள் கடைபிடித்து உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story