ஓசூரில், நடத்தையில் சந்தேகம் கழுத்தை நெரித்து பெண் கொலை கணவர் போலீசில் சரண்
ஓசூரில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
ஓசூர்:
ஓசூரில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நடத்தையில் சந்தேகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி. சாலையில் வசித்து வந்தவர் ஜோதிஷ் (வயது 28). இருசக்கர வாகன மெக்கானிக். இவருக்கும், கர்நாடக மாநிலம் ஜிகினியை சேர்ந்த வந்தனா (25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லத்தீஷ் (6) என்ற மகன் உள்ளான்.
கணவன்-மனைவி 2 பேரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஜோதிஷ் அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
கழுத்தை நெரித்து கொலை
நேற்று முன்தினம் மாலை குழந்தை லத்தீஷ் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோதிஷ் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றார்.
இதனிடையே நேற்று ஜோதிஷ் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில், மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். இதையடுத்து ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே பிணமாக கிடந்த வந்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முனுசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக ஜோதிசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story