தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ 30 ஆயிரம் மோசடி


தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ 30 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 22 Aug 2021 10:50 PM IST (Updated: 22 Aug 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் மோட்டார் சைக்கிளை விற்பதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை

ஆன்லைனில் மோட்டார் சைக்கிளை விற்பதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் குருநாத பிள்ளை காலனியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் விக்ரம் (வயது 19). தனியார் நிறுவன ஊழியர். இவர் பழைய மோட்டார் சைக்கிளை வாங்க ஆன்லைனில் தேடினார்.

இதில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ராக்கிபாளையத்தை சேர்ந்த லட்சுமண குமார் (23) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை விற்ப தாக படம் மற்றும் செல்போன் எண்ணுடன் பழைய வாகனங்களை விற்கும் ஆப்பில் விளம்பரம் செய்திருந்தார். 

அதை பார்த்த விக்ரம் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு லட்சுமணகுமாரிடம் பேசினார்.

ரூ.30 ஆயிரம்

அவர், மோட்டார் சைக்கிளை ரூ.55 ஆயிரத்துக்கு விற்பதாக கூறினார். அதை வாங்க விரும்புவதாக விக்ரம் கூறியதும், கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகே வந்து பணத்தை கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று லட்சுமணகுமார் கூறியுள்ளார்.

அதன்படி விக்ரம் கடந்த மாதம் 21-ந் தேதி கோவை அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னல் அருகே வந்தார். அங்கு லட்சுமண குமார் மோட்டார் சைக்கிளுடன் தயாராக நின்றார். அப்போது விக்ரம், லட்சுமணகுமாரிடம் முன்பணமாக ரூ.30 ஆயிரம் தருவதாக வும், மீதி பணத்தை பின்னர் தருவதாக கூறி உள்ளார்.

பத்திரத்தில் கையெழுத்து

இதையடுத்து விக்ரமிடம் ரூ.30 ஆயிரத்தை வாங்கிய லட்சுமணகுமார் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதற்கான பத்திரத்திலும் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். அப்போது லட்சுமணகுமார், தான் ஆசையாக வாங்கியதை கடைசியாக ஒரு முறை ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக கூறி மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றார்.

ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. விக்ரம், அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விக்ரம் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமண குமாரை தேடி வந்தனர்.

பறிமுதல்

இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதே மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என்று மீண்டும் ஆன்லைனில் விளம்பரம் வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்ரம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். 

உடனே போலீசார் லட்சுமணகுமாரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி விக்ரமின் நண்பர் ஒருவர் மூலம் லட்சுமணகுமாரை தொடர்புகொண்டு மோட்டார் சைக்கிளை வாங்க விரும்புவதாக கூறி லட்சுமிமில்ஸ் சந்திப்பு பகுதிக்கு வரவழைத்தனர்.

அங்கு மோட்டார் சைக்கிளில் லட்சுமணகுமார் வந்ததும் போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story