தியேட்டர்களை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்
கோவையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தியேட்டர்களை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.
கோவை
கோவையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தியேட்டர்களை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.
தியேட்டர்களை திறக்க அனுமதி
கோவையில் கொரோனா முதல் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்ததால் கடந்த ஜனவரி மாதம் தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
ஏப்ரல் வரை செயல்பட்ட நிலையில், 2-வது அலை காரணமாக தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக அடுத்த மாதம் செப்டம்பர் 6-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதில், வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.திங்கட்கிழமை முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
முன்னேற்பாடுகள் தீவிரம்
இதனால் கோவையில் உள்ள தியேட்டர்களை திறப்பதற்கான முன் னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தியேட்டர்களில் இருக்கைகள், கேண்டீன்களில் கிருமி நாசினி தெளித்தும், வளாகத்தை தண்ணீர் ஊற்றியும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
50 சதவீதம் பார்வையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகளில் கயிறுகள் கட்டுதல், குறியீடுகள் வரைதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தியேட்டர் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வரி விலக்கு வேண்டும்
இது குறித்து தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், தியேட்டர் களை திறக்க அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம்.
எனவே புதிதாக விதித்துள்ள வரி மற்றும் கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்கள் கழித்து புதிய படங்களை திரையிடலாம் என்று திட்டமிட்டு வருகிறோம் என்றார்.
கிருமி நாசினி தெளிப்பு
இதேபோல் இன்று முதல் உயிரியல் பூங்காக்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
பூங்கா ஊழியர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக உயிரியல் பூங்கா டாக்டர் செந்தில்நாதன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story