அரிதாரிமங்கலத்தில் கல்வெட்டுடன் கூடிய தமிழகத்தின் முதல் தவ்வை சிற்பம் கண்டெடுப்பு


அரிதாரிமங்கலத்தில் கல்வெட்டுடன் கூடிய தமிழகத்தின் முதல் தவ்வை சிற்பம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 22 Aug 2021 11:01 PM IST (Updated: 22 Aug 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் தாலுகா அரிதாரிமங்கலத்தில் கல்வெட்டுடன் கூடிய தமிழகத்தின் முதல் தவ்வை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை

செங்கம் தாலுகா அரிதாரிமங்கலத்தில் கல்வெட்டுடன் கூடிய தமிழகத்தின் முதல் தவ்வை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தவ்வை சிற்பம்

செங்கம் தாலுகா அரிதாரிமங்கலத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், மதன்மோகன், பழனிசாமி, ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா, சுதாகர், சாமிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது ஏரிக்கரை அருகே 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை என்ற சிற்பம் கல்வெட்டுடன் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் கூறியதாவது:- 

நீர் ஆதாரங்கள் மனித வாழ்வில் இன்றியமையாதவை. ஆதலால் அவை தெய்வங்களாக வணங்கப்படுவதும், அவற்றைத் தெய்வங்கள் பாதுகாப்பதாகவும் தமிழக மக்களிடையே நம்பிகை இருந்து வருகிறது. ஏரிமடைகளை ‘கருப்பு’ காப்பதாக மடை கருப்பு தெய்வங்கள் பல இடங்களில் உள்ளன. அந்த மாதிரியான சிற்பமும் அதனுடன் சேர்ந்த கல்வெட்டும் அரிதாரிமங்கலம் கிராமத்தில் கிடைத்துள்ளது. 

இந்த கல்வெட்டில் ஏரியிலிருந்து வயல்களுக்கு நீர் பாய உதவும் தூம்பினையும், கேட்டையாரையும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்து கொடுத்தார் என்பது இதன் தகவலாகும். தவ்வைக்கு பிங்கல நிகண்டு கழுதையூர்தி, காக்கைக்கொடியாள், முகடி, தவ்வை கலதி, சீர்கேடி, கேட்டை, கெடலணங்கு, ஏகவேணி, சேட்டை என்ற பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. 

13-ம் நூற்றாண்டு

அவற்றில் கேட்டை என்ற பெயர் இக்கல்வெட்டில் திருக்கேட்டையார் என்று குறிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக துர்க்கை அல்லது கொற்றவை சிற்பங்களில் இதுவரை, அவற்றைச் செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு கிடைத்துள்ளன. முதல் முறையாக இங்கு தவ்வை சிற்பத்தை செய்து கொடுத்த செய்தி கிடைப்பது சிறப்பாகும். 

இவளுடைய மகனாகக் கருதப்படும் மாந்தன் மாட்டு முகத்துடன் வலது புறம் காட்டப்படுவது மரபு. இங்கு இடது புறம் காட்டப்பட்டுள்ளான். மகள் மாந்தி வலதுபுறம் காட்டப்பட்டுள்ளாள். இவளது காக்கைக் கொடி தெளிவாக இடது தோள் புறம் காட்டப்பட்டுள்ளது. மாந்தன், மாந்தி, தவ்வை மூவரும் அபயவரம் காட்டி அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தூம்பையும், தவ்வையும் செய்தளித்த செய்தி ஒரு சேரக் காணப்படுவதால் இவள் ஏரியின் காவல் தெய்வம் என்பது உறுதியாகிறது. 

மேலும் அபய கரம் காட்டி அமர்ந்து அருள்பாலிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருக்கேட்டையார் கல்வெட்டும், சிற்பமும் கலை, சமய, சமூக வரலாற்றிற்கு புதிய செய்தியை வழங்குகின்றது. மன்னர் பெயர் இல்லாததால் கல்வெட்டின் காலம் 13-ம் நூற்றாண்டு என்று எடுத்து கொள்ளலாம். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story