தரங்கம்பாடி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்
8 நாட்களுக்கு பிறகு தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
பொறையாறு:
8 நாட்களுக்கு பிறகு தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
வேலை நிறுத்தம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும், சாதாரண வலையை கொண்டு மீன் பிடிக்கும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. கடந்த 14-ந் தேதி சுருக்குமடி வலையுடன் கடலுக்கு சென்ற பூம்புகார் மற்றும் சந்திரபாடி மீனவர்களை தரங்கம்பாடி, வானகிரி குட்டியாண்டியூர், சின்னங்குடி உள்ளிட்ட கிராம மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று நடுக்கடலில் சுற்றி வளைத்தனர்.
அப்போது விசைப்படகு மோதி ஒரு பைபர் படகு மூழ்கியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையால் பூம்புகார் மீனவர்களுக்கு சொந்தமான 4 பைபர் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் கடந்த 8 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பேச்சு வார்த்தை
இந்தநிலையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை இரு தரப்பு மீனவர்களும் தனித்தனியாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோரையும் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் திருமுல்லைவாசல் கிராமத்தில் மோதலில் ஈடுபட்ட சுருக்குமடி மீன்பிடி விசைப்படகு மற்றும் வலைகளை மீன்வளத்துறையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சாதாரண வலையை பயன்படுத்தும் பைபர் படகு மீனவர்கள் சார்பில் போராட்டத்தை கைவிடுவதாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
கடலுக்கு சென்றனர்
இதைத்தொடர்ந்து கடந்த 8 நாட்களுக்குப் பிறகு நேற்று 20 கிராமங்களை சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான சாதாரண வலையை பயன்படுத்தும் பைபர் படகு மீனவர்கள் அதிகாலையில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று காலை 8 மணி அளவில் கரை திரும்பிய மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த வகையில் பெரிய வகை மீன்கள் சிக்கவில்லை. மீனவர்கள் வலையில் மத்தி, கானாங்கெளுத்தி, பொறுவாய், கெலங்கான், நண்டுகள் உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் பிடிபட்டன.
தரங்கம்பாடி பகுதியில் ஒரு வாரத்திற்கு பின்னர் மீன் பிடிக்கப்பட்டதால் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் தரங்கம்பாடி, பொறையாறு கடைவீதியில் குவிந்தனர்.
Related Tags :
Next Story