இன்று முதல் திறக்கப்படுவதையொட்டி தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிப்பு
தியேட்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுவதையொட்டி கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தளர்வுகள் பல அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைய இருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் இன்று முதல் திறக்கவும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்கும் படியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தியேட்டர்களை திறக்க அதன் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிருமி நாசினி தெளிப்பு
புதுக்கோட்டையில் தியேட்டர்களில் நேற்று சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் இருக்கைகளிலும், வளாகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. தியேட்டர்களில் ரசிகர்கள் அமரும் இருக்கைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இதுகுறித்து தியேட்டர் மேலாளர் ஒருவர் கூறுகையில், ``கடந்த ஆண்டில் (2020) கொரோனா ஊரடங்கின் காரணமாக 7 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்த ஆண்டில் (2021) கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 11 தியேட்டர்கள் உள்ளன'' என்றார்.
Related Tags :
Next Story