சினிமா தியேட்டர்களை தூய்மைப்படுத்தும் பணி மும்முரம்


சினிமா தியேட்டர்களை தூய்மைப்படுத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 23 Aug 2021 12:18 AM IST (Updated: 23 Aug 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவதால், தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றன.

கரூர்,
ஊரடங்கு உத்தரவு
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள், சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. தொற்றின் பாதிப்பு குறைய தொடங்கியதால், அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டன. போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கப்படும். தியேட்டர் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.
சுத்தப்படுத்தும் பணி மும்முரம்
தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால், அதனை தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் கரூரில் உள்ள 12 தியேட்டர்களில் வளாகம் மற்றும் இருக்கைகளை சுத்தப்படுத்தும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன. மேலும் தியேட்டர்கள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. 
அரசு வழிகாட்டு முறைப்படி சீட்டுகளை முறைப்படுத்துவது, டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைப்பது போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்றன. மேலும் ரசிகர்கள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் மற்றும் உடல் வெப்பநிலை அறிய தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. இதனால் ரசிகர்களும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

Next Story