குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை; கணவர் கைது


குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை; கணவர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2021 12:39 AM IST (Updated: 23 Aug 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப பிரச்சினை காரணமாக ஈரோட்டில் விஷம் குடித்த பெண், திண்டுக்கல்லில் இறந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை:
குடும்ப பிரச்சினை காரணமாக ஈரோட்டில் விஷம் குடித்த பெண், திண்டுக்கல்லில் இறந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப பிரச்சினை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மவுனராஜா (வயது 35). இவர், ஈரோட்டில் உள்ள தனியார் மில்லில் கணக்காளராக வேலை பார்த்தார். அவருடைய மனைவி இலக்கியா (30). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மவுனராஜா தனது குடும்பத்தினருடன் ஈரோட்டில் வசித்து வந்தார். அங்கு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி மவுனராஜாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இலக்கியா, சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார். பின்னர் 2 பேரும் ஈரோட்டில் இருந்து எஸ்.மேட்டுப்பட்டிக்கு பஸ்சில் வந்தனர்.
பஸ்சில் தகராறு
பஸ்சில் வரும் போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இலக்கியாவுக்கு அடிக்கடி வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டது. தன்னுடன் தகராறு செய்ததால் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். அதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவருக்கு வாந்தி வந்திருக்கலாம் என்று மவுனராஜா நினைத்தார்.
இதற்கிடையே எஸ்.மேட்டுப்பட்டிக்கு வந்த அவர்கள், தங்களது வீட்டுக்கு சென்றனர். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையறிந்த இலக்கியாவின் தந்தை மணி, தாய் நரதம்மாள் ஆகியோர் எஸ்.மேட்டுப்பட்டிக்கு வந்து அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். 
ஈரோட்டில் விஷம் குடிப்பு
அப்போது திடீரென்று இலக்கியா மயங்கி கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன அவருடைய பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு இலக்கியாவை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. ஈரோட்டில் இருந்து புறப்படும்போதே இலக்கியா விஷம் குடித்து இருக்கிறார். 
விஷம் குடித்து நீண்ட நேரம் ஆனதால் அவரது உடல்நிலை மிகவும மோசமானது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இலக்கியா நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
கணவர் கைது
இதுகுறித்து இலக்கியாவின் பெற்றோர், நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், மவுனராஜா எங்களது மகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு அவரை துன்புறுத்தினார். இதற்கு அவரது தாய் கருப்பாயியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். எனவே எனது மகளை தற்கொலை செய்ய தூண்டிய மவுனராஜா, அவருடைய தாயார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 
அந்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மவுனராஜாவை கைது செய்தனர். மேலும் அவருடைய தாயாரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் விஷம் குடித்த பெண், திண்டுக்கல்லில் பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story