மண் அள்ளிய வாலிபர் உயிரோடு புதைந்து பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுப்பு பூசுவதற்காக மண் எடுக்க சென்ற போது மண் சரிந்ததில் வாலிபர் உயிரோடு புதைந்து பலியானார். மற்றொருவக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுப்பு பூசுவதற்காக மண் எடுக்க சென்ற போது மண் சரிந்ததில் வாலிபர் உயிரோடு புதைந்து பலியானார். மற்றொருவக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மண் சரிந்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேவுகப்பெருமாள்(வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து.
இவர்கள் இருவரும் வீட்டில் மண் அடுப்பு பூசுவதற்காக இருசக்கர வாகனத்தில் களத்தூர் அருகே உள்ள அர்ச்சனா நதி ஓடைக்கு மண் எடுக்க சென்றனர். அவர்கள் 2 பேரும் சேர்ந்து மண் அள்ளியபோது திடீரென அவர்கள் நின்ற பகுதியில் மண் பொலபொலவென சரிந்தது.
இதனால் சேவுகப்பெருமாள், மாரிமுத்து ஆகிய 2 பேரும் மண்ணோடு புதைந்து உள்ளே சிக்கி தவித்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர்.
வாலிபர் பலி
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து மண்ணில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சேவுக பெருமாளை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் மாரிமுத்துவுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சேவுகப்பெருமாள் தந்தை சேவுகன் நத்தம்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண் அள்ளிய போது உயிரோடு மண்ணில் புதைந்து வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story