பத்திரகாளி அம்மன் கோவிலில் கொள்ளை


பத்திரகாளி அம்மன் கோவிலில் கொள்ளை
x
தினத்தந்தி 23 Aug 2021 1:10 AM IST (Updated: 23 Aug 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே பத்திரகாளி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழி அருகே பத்திரகாளி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவில் கதவு பூட்டு உடைப்பு
ஆரல்வாய்மொழி அருகே தோவாளை புதூரில் வில்லசேரி பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மனோகரன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று காலை பவுர்ணமி பூஜைகள் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. 
இதுகுறித்து பூசாரி ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
பொருட்கள் கொள்ளை
ஊர் தலைவர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது ஐம்பொன்னால் செய்யப்பட்ட வீர வாள், பூஜை பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 இதுகுறித்து ஊர் தலைவர் சுரேஷ் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
2-வது முறையாக...
இந்த கோவிலில் சில மாதங்களுக்கு முன்பு தங்க ஆபரணங்கள் கொள்ளை போனது. அதை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் சிக்கும் முன்பு தற்போது 2-வது முறையாக மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
மேலும், நேற்று முன்தினம் சோழபுரத்தில் சுடலைமாடசாமி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் மறைவதற்குள் மற்றொரு கொள்ளை நடந்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story