பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே குமாரசாமியாபுரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் திருநாவுக்கரசர் (வயது 40) உள்பட ஏராளமானோர் சம்பவத்தன்று பொருட்கள் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பருத்திவாய்குளத்தை சேர்ந்த ஒருவர் வரிசையில் நிற்காமல் நேராக ரேஷன் அட்டையை கொடுத்து பொருள் வாங்க சென்றார். இதனை திருநாவுக்கரசர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து திருநாவுக்கரசருக்கு கொலை மிரட்டல் விடுத்து வெட்ட முயன்றார். ஆனால் திருநாவுக்கரசர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து ஊர் பொதுமக்கள் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று திருநாவுக்கரசர் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அந்த நபர் அவரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் அங்கிருந்து அவர் தப்பித்து ஓடி ஊர் மக்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் மீண்டும் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்து முற்றுகையிட்டனர்.
சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக பிடித்து விடுவோம் என்று போலீசார் உறுதி அளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story