சின்னவிளை கடற்கரையில் கருப்பு கொடியுடன் மீனவர்கள் போராட்டம்
தேசிய மீன்வள மசோதாவை கண்டித்து சின்னவிளை கடற்கரையில் மீனவர்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
மணவாளக்குறிச்சி,
தேசிய மீன்வள மசோதாவை கண்டித்து சின்னவிளை கடற்கரையில் மீனவர்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
கடற்கரையில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வர இருக்கும் தேசிய கடல் வள மேலாண்மை மற்றும் ஒழுங்கு முறை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு (பெடா) சார்பில் மணவாளக்குறிச்சி சின்னவிளை கடற்கரையில் மீனவர்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சின்னவிளை ஊர் நிர்வாகிகள் டிட்டன், கிளேமன்ஸ், போர்னட், ஷெல்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். கடியபட்டணம் பீட்டர் ராஜ், பெரியவிளை ரோஜாண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு செயல் தலைவர் பிரிட்டோ ஆன்றனி வரவேற்று பேசினார். மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு தலைவர் டைட்டஸ் விளக்கவுரை ஆற்றினார்.
கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சின்னவிளை பங்கு பேரவை தலைவர் சகாய ஜெரோம், விஜய் வசந்த் எம்.பி., தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாநில இணை செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. நிறைவுரை ஆற்றினார்.
கருப்பு கொடியுடன்
இதில், சின்னவிளை ஏரோணிமூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெடா ஆலோசகர் சூசை நாயகம் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் சின்னவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் கடற்கரையில் கைகளில் கருப்பு கொடியை ஏந்தியபடி மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது, ‘மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய மீன்வள மசோதாவால் மீனவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் தர வேண்டும். மீனவர்களின் கருத்துக்களையும் அரசு கேட்டு திருத்தம் செய்ய வேண்டும். புதிய மீன்வள மசோதா விவகாரத்தில் மீனவர்களுக்கு காங்கிரஸ் என்றும் துணை நிற்கும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் சம்பந்தப்பட்ட துறை மந்திரியிடம் பேசி வருகிறேன்’ என்றார்.
Related Tags :
Next Story