நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்
ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தாங்கள் வாங்கி வந்த பால், மஞ்சள் பொடியை கோவில் நுழைவு வாயிலில் வைத்து சென்றனர்.
நாகர்கோவில்,
ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தாங்கள் வாங்கி வந்த பால், மஞ்சள் பொடியை கோவில் நுழைவு வாயிலில் வைத்து சென்றனர்.
ஆவணி ஞாயிறு
ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு என்பது போல குமரி மாவட்டத்தில் ஆவணி மாதத்தில் நாகராஜர் வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது. இதனாலேயே நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கோவிலில் ஆண்களும், பெண்களும் குவிவார்கள். ஆனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு இந்த வாரமும் கடைப்பிடிக்கப்படுவதால், குமரி மாவட்டத்தில் நேற்று அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருந்தன.
அதே போல ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு புகழ் பெற்ற நாகராஜா கோவிலும் மூடப்பட்டு இருந்தது. கடந்த வாரம் நாகராஜா கோவில் மூடப்பட்டு இருந்த போதே சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் இந்த வாரத்தில் (ஆவணி முதல் ஞாயிறு) பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர்.
பக்தர்கள் ஏமாற்றம்
ஆனால் கொரோனா அச்சம் நீங்காததால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு எப்படியும் அனுமதி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் நேற்று நாகராஜா கோவிலுக்கு படை எடுத்தனர். கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்கதர்கள் வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. எனினும் கோவில் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்ததால், பக்தர்களால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. மேலும் கோவில் நுழைவு வாயில் கதவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்பட்டு இருந்தது.
இது நாகராஜரை கண்குளிர பார்த்து வணங்கி விடலாம் என்று வந்த பக்தர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. எனினும் சோர்வடையாத பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயில் முன் இருந்தே சாமியை நினைத்து வழிபட்டனர். கோவில் கதவை தொட்டு வணங்கினார்கள்.
கோவில் நுழைவு வாயிலில்...
நாகராஜா கோவிலை பொறுத்த வரை கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி வீற்றிருக்கும் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் அபிஷேகம் செய்வது முதன்மை வழிபாடாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போதே நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றவும், மஞ்சள் பொடி தூவவும் அனுமதிக்கப்படவில்லை. அதே தடை தற்போது தொடர்வதோடு கோவிலும் மூடப்பட்டு இருந்ததால், பக்தர்கள் வாங்கி வந்த பால் மற்றும் மஞ்சள் பொடி பாக்கெட்களை கோவில் நுழைவு வாயில் அருகே வைத்துவிட்டு சென்றனர்.
இதற்கிடையே அதிகாலையில் கோவில் முன் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story