மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி போராட்டம்; தேவேகவுடா அறிவிப்பு
மேகதாது திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி முன்னாள் பிரதமர் தேவேகவுடா போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஜனநாயக நடைமுறை
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் நான் கலந்து கொண்டேன். அந்த கூட்டத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஆனால் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மோதலால் நாடாளுமன்ற நேரம் வீணடிக்கப்பட்டது. விவாதம் நடத்தாமலேயே பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா குறித்து 3 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டு பேசினேன். அதை தவிர்த்து வேறு விவாதங்கள் நடக்கவில்லை. இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன்.
மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தை நான் முன் எப்போதும் பார்த்தது இல்லை. இது வேதனை அளிப்பதாக உள்ளது. ஜனநாயக நடைமுறை திசை மாறி செல்கிறது. இதை சரிசெய்ய வேண்டியது அவசியம். நமது முன்னோர்கள் தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்து சுதந்திரம் பெற்று கொடுத்தனர். இதை அரசியல் தலைவர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மேகதாது திட்டம்
கிருஷ்ணா நதி நீர் பிரச்சினை குறித்து மராட்டிய மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஒருவேளை இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், நான் போராட்டம் நடத்துவேன். கிருஷ்ணா நதி ஓடும் பகுதியில் பாதயாத்திரை மேற்கொள்வேன்.
மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி போராட்டம் நடத்துவேன். இதில் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டின் பேச்சை கேட்டு, மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. இது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எப்போது போராட்டம் நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து அறிவிப்பேன்.
யாராலும் தடுக்க முடியாது
பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளால் போராட்டம் நடத்த முடியாது. மாநில கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சி தான் போராட்டம் நடத்தும். நான் பிரதமராக இருந்தபோது கிருஷ்ணா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தேன். அந்த நிதியை குறைத்துவிட்டனர். ஜனதா தளம் (எஸ்) கட்சியை குறைத்து பேசுகிறார்கள். எங்கள் கட்சி ஆட்சியை பிடிக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் பாதயாத்திரை நடத்தப்படும். எனக்கு வயதாகிவிட்டதால் நான் பாதயாத்திரை நடத்த முடியாது. பாதயாத்திரையை குமாரசாமி நடத்துவார். நான் ஆங்காங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவேன். நேரு, வாஜ்பாய் குறித்து தரம் தாழ்ந்து பேசுவதை சரியல்ல. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை யாராலும் தடுக்க முடியாது. அந்தந்த மாநிலங்களில் மாநில கட்சிகள் வலுவாக உள்ளன.
ஆப்கானிஸ்தான் நிலை
மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தியும் போராடுகிறார். அவர் டெல்லியை விட்டு வெளியில் சென்று போராட வேண்டும். மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் தலைமை எவ்வாறு இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறும் முன்பு அங்குள்ள நிலையை ஆராய்ந்து பார்த்து அந்த நாட்டின் அதிபர் முடிவு எடுத்திருக்க வேண்டும்.
டிரம்ப் மற்றும் பைடன் இடையே வித்தியாசம் உள்ளது. பைடன் திடீரென எடுத்த முடிவே, ஆப்கானிஸ்தானில் இந்த நிலைமை ஏற்பட்டதற்கு காரணமாக இருக்கலாம். நமது நாட்டின் நலன் கருதி இந்த விஷயத்தில் நான் அதிகமாக கருத்துகளை வெளிப்படுத்த விரும்பவில்லை.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story