கட்டபிரபா ஆற்றில் மூழ்கி தம்பதி-மகள் சாவு


கட்டபிரபா ஆற்றில் மூழ்கி தம்பதி-மகள் சாவு
x
தினத்தந்தி 23 Aug 2021 2:44 AM IST (Updated: 23 Aug 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

பாகல்கோட்டை அருகே கட்டபிரபா ஆற்றில் மூழ்கி தம்பதி-மகள் இறந்த சம்பவம் நடந்து உள்ளது.

பாகல்கோட்டை:
  
தம்பதி-மகள்

  பாகல்கோட்டை மாவட்டம் குலதேகுட்டா தாலுகா கோட்டக்கல் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் (வயது 40). இவரது மனைவி ஸ்ரீதேவி (32), மகள் நந்தினி (12). இந்த நிலையில் விஸ்வநாத் தனது மனைவி, மகளுடன் ஒரு காரில் நேற்று பாதாமியில் உள்ள பனசங்கரி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்ததும் 3 பேரும் பாதாமி அருகே உள்ள சிவயோக மடத்திற்கு சென்றனர். பின்னர் அந்த மடத்தின் அருகே ஓடும் கட்டபிரபா ஆற்றின் கரையில் அமர்ந்து உணவு சாப்பிட முடிவு செய்தனர்.

  இந்த நிலையில் கை கழுவுவதற்காக ஸ்ரீதேவி, ஆற்றுக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஸ்வநாத்தும், நந்தினியும் ஸ்ரீதேவியை காப்பாற்ற ஆற்றில் குதித்தனர்.

உடல்களை தேடும் பணி

  ஆனால் அவர்களும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டனர். இதனால் அவர்களும் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 3 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர். இதுபற்றி அறிந்ததும் பாதாமி போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆற்றில் மூழ்கி இறந்த 3 பேரின் உடல்களையும் தேடும் பணி நடந்தது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நந்தினி, விஸ்வநாத்தின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

  இந்த சம்பவம் குறித்து பாதாமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் பாகல்கோட்டையில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story