கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு


மந்திரி பி.சி.நாகேஸ், ஒரு பள்ளியில் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
x
மந்திரி பி.சி.நாகேஸ், ஒரு பள்ளியில் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
தினத்தந்தி 23 Aug 2021 2:56 AM IST (Updated: 23 Aug 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

பெங்களூரு:

பள்ளிகள் மூடப்பட்டது

  கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு பரவ தொடங்கியது. இதையடுத்து மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா முதல் அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை தொடங்கியதை அடுத்து பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

  அதாவது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிருமிநாசினி தெளித்து தூய்மைக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் ஒரு மேசையில் ஒரு மாணவரை மட்டுமே அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்கள் அனுமதிக்க வேண்டும் எனறு கூறியுள்ளது. சுழற்சி முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி ஆய்வு

  பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், நேற்று துமகூரு மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கொரோனா பரவல் அதிகமாக உள்ள உடுப்பி, சிக்கமகளூரு, ஹாசன், குடகு, தட்சிண கன்னடா ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த 5 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார். அவர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். 5 மாவதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்புகளுக்கு வர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். பள்ளிகளில் மாணவர்கள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் திரவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருமிநாசினி தெளித்து...

  ஒரு வகுப்பில் 2 மாணவர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், பள்ளிகளை மூடி கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்த மாத இறுதியில் பள்ளி கல்வித்துறை மந்திரி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர்.

Next Story