உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த 31 பவுன் நகை பறிமுதல்
நசரத்பேட்டை அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர்களிடம் 250 கிராம் (31 பவுன்) தங்க நகைகள் இருந்தது. ஆனால் அவற்றுக்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து 31 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சந்தேகத்தின்பேரில் 2 பேரிடமும் விசாரித்தனர். அதில் அவர்கள், பெங்களூரூவைச் சேர்ந்த ஜாங்கீர் பில்லா (வயது 28) மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் தாஸ் (16) என்பதும், இவர்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தங்க கட்டிகளை கொண்டு வந்து உருக்கி, அவற்றை நகைகளாக மாற்றி மீண்டும் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர்.
பின்னர் இவர்களிடம் நகைகளை கொடுத்து அனுப்பிய நகைபட்டறை உரிமையாளர் அதற்கான ரசீதை கொண்டு வந்து போலீசாரிடம் காண்பித்தார். அதனை சரி பார்த்த போலீசார், பின்னர் அந்த நகைகளை 2 பேரிடமும் கொடுத்து அனுப்பினார்கள்.
Related Tags :
Next Story