வடஇந்திய பெண்கள் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகை கொண்டாட்டம்; ‘ராக்கி கயிறு’ கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்


வடஇந்திய பெண்கள் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகை கொண்டாட்டம்; ‘ராக்கி கயிறு’ கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:56 AM IST (Updated: 23 Aug 2021 11:56 AM IST)
t-max-icont-min-icon

சகோதரத்துவ உணர்வு, பாசத்தை பறைச்சாற்றும் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகை ஆண்டுந்தோறும் ஆகஸ்டு 22-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இப்பண்டிகை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னையில் வேப்பேரி, சவுக்கார்பேட்டை, ஓட்டேரி உள்பட பகுதிகளில் வசிக்கும் வடஇந்திய பெண்கள் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையின் சம்பிரதாயங்களை செய்து உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி, உடன்பிறவா சகோதரர்களாக தாங்கள் ஏற்றுக்கொண்டவர்களின் கை மணிக்கட்டில் ‘ராக்கி கயிறு’ கட்டிவிட்டு சகோதரத்துவ உணர்வு, பாசத்தை வெளிப்படுத்தினர்.

சமூக நல்லிணக்கம், சகோதரத்துவத்தின் மாண்பு, பெருமைகளை பேசும் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையின் சிறப்புகள் குறித்து சென்னையில் வசிக்கும் வட இந்திய பெண்கள் மகிழ்ச்சியுடன் கூறுகையில், ‘ரக்‌ஷா பந்தன்’ என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’, ‘பாதுகாப்பு பந்தம்’ என்று பொருள் ஆகும். கணவன்-மனைவி பந்ததுக்கு தாலி கயிறு எவ்வளவு முக்கியமோ, அதே போன்றுதான் சகோதர-சகோதரிகள் உறவுக்கான பாச கயிறாக ராக்கி கயிறை நாங்கள் கருதுகிறோம். இன்றைய அவசர வாழ்க்கையில் உறவினர்களுடன் ஒன்றுக்கூடி உறவாட முடியாமல் அனைவரும் கடிகார முள் போன்று ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் இதுபோன்ற பண்டிகைகள் சகோதர-சகோதரிகளின் பாசப்பிணைப்பை பலப்படுத்தும் பாலமாக அமைகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தோடு இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடுகிறோம்.’ என்றனர்.

Next Story