தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் வாயில் கருப்பு துணி கட்டியபடி கோஷமிட்டனர்


தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் வாயில் கருப்பு துணி கட்டியபடி கோஷமிட்டனர்
x
தினத்தந்தி 23 Aug 2021 4:28 PM IST (Updated: 23 Aug 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

தனி 'ஹால்மார்க்' அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் நகைக்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டியபடி கோஷமிட்டனர்


தேனி:
தங்க நகைக்கடைகளில் விற்கப்படும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி 'ஹால்மார்க்' அடையாள எண்ணை (எச்.யு.ஐ.டி.) பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தரநிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) அறிவித்துள்ளது. இந்த தனி அடையாள எண் மூலம் தங்க நகை எங்கு உருவாக்கப்படுகிறது? யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது? யார் வாங்குகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கு நகை வணிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகம் முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் நேற்று 2½ மணி நேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தேனி மாவட்டம் முழுவதும் நகைக்கடைகள் நேற்று காலை 9 மணி முதல் பகல் 11.30 மணி வரை அடைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
மேலும், தேனி மாவட்ட தங்கம் வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் தேனி நகர் மதுரை சாலையில் நகைக்கடை உரிமையாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் பிரேம்சாய் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சத்தியநாராயணன், தேனி நகர தலைவர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு புதிய நடைமுறையை கைவிட வேண்டும், நகை விற்பனையில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர் பிரேம்சாய் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் 350 நகைக்கடைகள் உள்ளன. அவை அனைத்தும் அடைக்கப்பட்டன. சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பாதிக்காதவாறு ஹால்மார்க் மற்றும் ஹால்மார்க் இல்லாத நகைகளை எளிய முறையில் விற்பனை செய்யும் அளவுக்கு விதிவிலக்குடன் கூடிய ஹால்மார்க் லைசென்ஸ் சட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். ஹால்மார்க் லைசென்ஸ் பெற்ற வியாபாரிகளை எச்.யு.ஐ.டி. என்ற கடுமையான சட்டத்தை கொண்டு ஒடுக்க நினைக்கும் அணுகுமுறையை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.


Next Story