4 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் கடலில் புனித நீராடிய பகத்ர்கள்
திருச்செந்தூர் கோவில் கடலில் 4 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் புனித நீராடினர்
திருச்செந்தூர்:
4 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் கடலில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தடை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. பின்னர் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-4-2021 முதல் 4-7-2021 வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. எனினும் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன.
பின்னர் ஊரடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 5-7-2021 முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும் கோவில் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கடற்கரைக்கு பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
புனித நீராடிய பக்தர்கள்
இந்த நிலையில் ஊரடங்கில் மீண்டும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தினமும் வழிபடவும், கோவில் கடற்கரை, நாழிக்கிணற்றில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மாதங்களுக்கு பிறகு கோவில் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தேங்காய் உடைக்க தடை
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் கோவிலில் பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபடவும், அபிஷேக பொருட்களை கொண்டு வரவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story