திருப்பூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம்
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
24 மணி நேரமும் தடுப்பூசி
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதலாக கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பூசியும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசு சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தது.
600 பேருக்கு...
அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தொடங்கிவைத்தார். மேலும், தடுப்பூசி போடும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-
24 மணி நேரம் செயல்படும் தடுப்பூசி திட்டத்திற்காக மைய பொறுப்பாளராக டாக்டர், செவிலியர், உதவியாளர் அடங்கிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். கையிருப்பு இருக்கிற வரை தடுப்பூசி செலுத்தப்படும். மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். முதல்நாளான நேற்று மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 பேருக்கு கோவிஷீல்டும், கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் என 100 பேருக்கு கோவேக்சினும் செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக நேற்று மட்டும் 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story