மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி நகை பறிப்பு


மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி நகை பறிப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 10:10 PM IST (Updated: 23 Aug 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

தொண்டாமுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி நகை பறித்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வடவள்ளி

தொண்டாமுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி நகை பறித்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

தியேட்டர் மேலாளர் 

கோவை அருகே தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வின்சென்ட் ரவிக்குமார் (வயது 57). இவர் கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் மேலாளராக வேலை செய்து வருகிறார். தற்போது தியேட்டர்கள் திறந்து உள்ளதால் அவர் வேலைக்கு செல்ல தயாரானார். 

அப்போது அவர் தனது மனைவி நிர்மலாவை (53) அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்று பணம் எடுக்க முடிவு செய்தார். அதன்படி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தொண்டாமுத்தூருக்கு சென்றனர். 

மோட்டார் சைக்கிளில் சென்றனர் 

அவர்கள் சுண்டபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையை கடந்தனர். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் வேகமாக வந்தனர். அந்தப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும் இல்லை. 

அப்போது திடீரென்று ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் வின்சென்ட் ரவிக்குமார்-நிர்மலா சென்ற மோட்டார் சைக்கிளை மறைத்தபடி நிறுத்தினார்கள். இதனால் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். 

தாக்கி நகை பறிப்பு 

அப்போது ஹெல்மெட் அணிந்து இருந்த ஒருவன் கீழே இறங்கி, நிர்மலா கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த தங்க சங்கிலியை பிடித்துக்கொண்டு மர்ம ஆசாமியுடன் போராடினார். 

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த மற்றொரு ஆசாமியும் கீழே இறங்கி வந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து வின்சென்ட் ரவிக்குமார், நிர்மலா ஆகியோரை தாக்கியதுடன், கீழே தள்ளினர். அத்துடன் நிர்மலா கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். 

போலீசார் விசாரணை 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். 

அத்துடன் காயம் அடைந்த தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு 

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களை வைத்து மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

 தொண்டாமுத்தூர் அருகே பட்டப்பகலில் தம்பதியை தாக்கி நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story