ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 23 Aug 2021 10:23 PM IST (Updated: 23 Aug 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நீலகிரியில் 4 மாதங்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டன. இதனால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஊட்டி,

கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நீலகிரியில் 4 மாதங்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டன. இதனால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பூங்காக்கள் திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா நேற்று முதல் திறக்கப்பட்டது. 

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் 20-ந் தேதி மூடப்பட்டு, 4 மாதங்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலை 7 மணி முதலே சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். அவர்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

வண்ண மலர்களை கண்டு ரசித்தனர்

4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல வண்ண மலர்களை கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பெரணி செடிகள் மற்றும் பெரிய புல்வெளி மைதானத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முழு ஊரடங்குக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குதூகலம் அடைந்தனர். 

நுழைவுவாயிலில் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு மணி நேரம் மட்டும் அனுமதி

இந்த நிலையில் தாவரவியல் பூங்காவை ஒரு மணிநேரம் மட்டும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் புல்வெளிகளில் அமரக்கூடாது. ஒரு வழியாக வந்து எதிரே சந்திக்காமல் மற்றொரு வழியாக திரும்ப வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முககவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டனர். இதனை அங்கிருந்த ஊழியர்கள் கண்காணித்தனர். பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 1,536 சுற்றுலா பயணிகள் வந்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு சவாரி

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். வாத்து, தவளை போன்ற வடிவங்களை கொண்ட புதிய படகுகளில் சவாரி செய்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பதிவேட்டில் குறிக்கப்படுகிறது.

அதேபோல் ரோஜா பூங்கா, தேயிலை பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் பைக்காரா படகு இல்லத்தில் அதிவேக படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Next Story