போலீஸ் போல் நடித்து ரூ.40 லட்சம் என்ஜின் ஆயிலுடன் டேங்கர் லாரி கடத்தல்


போலீஸ் போல் நடித்து ரூ.40 லட்சம் என்ஜின் ஆயிலுடன் டேங்கர் லாரி கடத்தல்
x
தினத்தந்தி 23 Aug 2021 10:53 PM IST (Updated: 23 Aug 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே போலீஸ் போல் நடித்து ரூ.40 லட்சம் மதிப்பிலான என்ஜின் ஆயிலுடன் டேங்கர் லாரியை கடத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்டமங்கலம், 

சென்னை ரெட்கில்ஸ்சில் உள்ள எரிட்ரால் பெட்ரோலியம் கம்பெனியில்  இருந்து 20 ஆயிரம் லிட்டர் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் என்ஜின் ஆயிலை நிரப்பிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த டேங்கர் லாரியை மதுரை யாகப்பாநகரை சேர்ந்த விமல் காந்தன் (வயது 40) என்பவர் ஓட்டினார். 
இந்த ஆயில் விழுப்புரம் அருகே உள்ள பள்ளித்தென்னலில் இயங்கி வரும் தனியார் கம்பெனிக்கு எடுத்து வரப்பட்டதாகும். ஆனால் இந்த தனியார் கம்பெனிக்கு அருகில் டேங்கர் லாரி வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் தன்னை போலீஸ் என்று கூறி லாரியை சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

டேங்கர் லாரி கடத்தல் 

இதை நம்பி டிரைவர் விமல்காந்தனும் டேங்கர் லாரியை நிறுத்தினார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த நபர் டிரைவரை மிரட்டி டேங்கர் லாரியை கடத்திச் சென்றார். அப்போது தான் அவர் போலி போலீஸ் என்பது டிரைவருக்கு தெரியவந்தது. இந்தநிலையில் வழியில் மதகடிப்பட்டில் அந்த நபரின் 2 கூட்டாளிகளும் டேங்கர் லாரியில் ஏறிக்கொண்டனர்.
பின்னர் விழுப்புரம் சென்றதும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டலின் அருகே டேங்கர் லாரியை நிறுத்தி அதில் இருந்த என்ஜின் ஆயிலை விற்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். 

3 பேர் தப்பி ஓட்டம்

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லாரி டிரைவர் விமல்காந்தன், நைசாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 
போலீசார் வருவதை அறிந்த மர்மநபர்கள் 3 பேரும் லாரியையும், டிரைவரையும் விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் லாரியையும், டிரைவரையும் மீட்டு சம்பவம் நடந்த கண்டமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

ரூ.40 லட்சம் ஆயில்

இது குறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த ரிஷாந்த் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து என்ஜின் ஆயிலுடன் டேங்கர் லாரியை கடத்தியது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூ.40 லட்சம் மதிப்புள்ள என்ஜின் ஆயில் மற்றும் லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story