சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை அடுத்த மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீதான விசாரணையை அடுத்த மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
விழுப்புரம்,
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த பாலியல் புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகினார். அப்போது அவர், இவ்வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை கேட்டும், தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியும் தனித்தனியாக 2 மனுக்களை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ஆஜராகி, இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது, எனவே இவ்வழக்கை இங்கு விசாரிக்கக்கூடாது என்று ஆட்சேபனை செய்து மனுதாக்கல் செய்தார்.
அடுத்த மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்த 3 மனுக்களையும் விசாரித்த நீதிபதி கோபிநாதன், இந்த மனுக்கள் மீது அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்வதற்காக இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
..............
Related Tags :
Next Story