கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது-சாக்கோட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் தகவல்


கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது-சாக்கோட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் தகவல்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:01 PM IST (Updated: 23 Aug 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்று சாக்கோட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.

காரைக்குடி,

கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்று சாக்கோட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.

ஒன்றிய குழு கூட்டம்

சாக்கோட்டை ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கேசவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, உதவி பொறியாளர் திருமேனி, வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.கே. சொக்கலிங்கம், ரேவதி சின்னத்துரை, சுப்பிரமணியன், தேவிமீனாள், ராமச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
எஸ்.எம்.கே.சொக்கலிங்கம்:- ஒன்றிய பகுதிகளில் கிராவல் பற்றாக்குறை காரணமாக சாலைப்பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. நமது பகுதிகளிலேயே உள்ள கிராவல் மண்ணை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆணையாளர் கேசவன்:- ஒன்றிய பகுதிகளில் உள்ள சாலை பணிகளை மேற்கொள்ள 3 ஆயிரம் யூனிட் கிராவல் மண் தேவை என மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். விரைவில் கிடைக்கும். கிடைத்தவுடன் வேலைகள் துரிதமாக நடக்கும்.

தடுப்பூசி போட தயக்கம்

தேவி மீனாள்:- வேடன் நகரில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட மறுக்கின்றனர் என்ன செய்வது? சுகாதார அலுவலர்களை கூட்டிச்சென்றால் அந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சென்று விடுகின்றனர்.
ஆணையாளர் கேசவன் ; கொரோனா தடுப்பூசியின் தேவையையும் அவசியத்தையும் வேடன் நகர் மக்களுக்கு உறுப்பினர் எடுத்து கூறி அவர்கள் அனைவரையும் தடுப்பூசியினை போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இது உறுப்பினரின் கடமையாகும். இதை அவர் செய்வார் என நம்புகிறோம்.ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்.அதுகுறித்த விவரத்தை மாவட்ட கலெக்டருக்கு அன்று மாலை 6 மணிக்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும். எனவே உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள தடுப்பூசி போடாதவர்களை சந்தித்து பேசி அவர்களை தடுப்பூசி போட செய்யுமாறு வேண்டுகிறேன்.

முன்மாதிரி

தலைவர் சரண்யாசெந்திநாதன்;- சாக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு நமது ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்ட பிறகு நமது பகுதியில் கொரோனா மரணம் என்பதே கிடையாது. மேலும் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதோடு இரண்டாவது டோஸ் போடுவதற்கும் தயாராகிவிட்டோம். கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் மற்ற ஒன்றியங்களுக்கு சாக்கோட்டை ஒன்றியம் முன்மாதிரியாக திகழ்கிறது. மழைக்காலம் தொடங்குவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறையினர் மூலம் மேற்கொண்டு வருகிறோம்.
 பின்னர் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Next Story