சுகாதாரத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை


சுகாதாரத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 Aug 2021 11:01 PM IST (Updated: 23 Aug 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்காததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

சுல்தான்பேட்டை,

கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்காததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

கொரோனா தடுப்பூசி

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தற்போது தினமும் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று லட்சுமி நாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஆனால் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் முகாமிற்கு திரண்டு வந்தனர். 

முற்றுகை
அப்போது சுகாதாரத்துறை ஊழியர்கள் 200 தடுப்பூசிகள் மட்டும் வந்திருப்பதாக கூறினார்கள். மேலும் 200 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டதால் வரிசையில் நின்ற பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சுகாதாத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கூடுதல் தடுப்பூசி
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் சந்திராபுரம் அரசு துணை சுகாதார நிலையம், சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் போதிய பஸ் வசதி இல்லாததால் ஏழை, எளிய மக்களால் அங்கு சென்று தடுப்பூசி போட முடியவில்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் 25 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டி உள்ளது.
இதற்கிடையில் கிராமங்களில் நடக்கும் தடுப்பூசி முகாம்கள் குறித்து  முன்கூட்டியே தெரிவதில்லை. 

இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக முகாமிற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய உள்ளது. 

எனவே கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கி, கிராமம் வாரியாக முகாம் நடத்த வேண்டும். மேலும் முகாம் குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story