நகை வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்


நகை வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:08 PM IST (Updated: 23 Aug 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

தங்க நகை கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை (எச்.யு.ஐ.டி.) பதிவு செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) அறிவித்திருக்கிறது. இந்த தனி அடையாள எண் மூலம் தங்க நகை எங்கு உருவாக்கப்படுகிறது, யார் வாங்குகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய தர நிர்ணய ஆணையம், நகையின் தரத்தை பார்ப்பதை விட்டுவிட்டு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை கைவிட வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை 2½ மணி நேரம் நகை வணிகர்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

நகை வணிகர்கள் கடையடைப்பு

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை வணிகர்கள் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் உள்ள 1,700 நகை கடைகள் பூட்டிக்கிடந்தன. இப்போராட்டம் காரணமாக நகை கடைகள் அமைந்துள்ள வீதி சற்று வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது.
விழுப்புரம் நகரை பொறுத்தவரை காமராஜர் வீதியில் நகை கடைகள் அதிகம் உள்ளன. அந்த வீதியில் உள்ள நகை கடைகள் மூடப்பட்டிருந்ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு விழுப்புரம் நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கன்யாலால் தலைமை தாங்கினார். செயலாளர் பாலமுருகன், பொருளாளர் பிரேம், துணைத்தலைவர் பாண்டுரங்கன், துணை செயலாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். போராட்டம் முடிந்ததும் காலை 11.30 மணிக்கு பிறகு நகை கடைகள் திறக்கப்பட்டன.

Next Story