தர்மபுரியில் பரபரப்பு: கலெக்டர் அலுவலக 3-வது மாடியில் இருந்து இளம்பெண் தற்கொலை முயற்சி
தர்மபுரியில் பரபரப்பு: கலெக்டர் அலுவலக 3-வது மாடியில் இருந்து இளம்பெண் தற்கொலை முயற்சி
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலக 3-வது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி மோகனா (வயது 21). இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் 3-வது மாடிக்கு (மொட்டை மாடி) சென்றார். அங்கிருந்து அவர் குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். இதை பார்த்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி மற்றும் போலீசார் மொட்டை மாடிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணுடன் சமரசம் பேசி கீழே அழைத்து வந்தனர்.
அந்த இளம்பெண்ணிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:- என்னுடைய கணவர் வேடியப்பன் கடந்த 2008-2009-ம் ஆண்டு நடைபெற்ற 2-ம் நிலை காவலர் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். அடுத்தடுத்து நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அவர் கட்-ஆப் ரிசல்ட் வெளியாகும் போது எனது கணவர் பெயர் வரவில்லை. நல்ல முறையில் தேர்வு எழுதியும் ரிசல்ட் வரவில்லை.
பரபரப்பு
இதனால் எனது கணவர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே அவரது தேர்வு பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் மோகனா, அவரது கணவர் வேடியப்பன் ஆகியோரை விசாரணைக்காக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பையும் மீறி இளம்பெண் ஒருவர் கலெக்டர் அலுவலக மேல் மாடிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story