தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்


தியேட்டர்கள் திறக்கப்படாததால்  ரசிகர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:54 PM IST (Updated: 23 Aug 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
தியேட்டர்களை திறக்க அனுமதி
கொரோனா  பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்தநிலையில் நோய் தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் இருந்து பல்வேறு கட்ட தளர்வுகளை அரசு அளித்து வருகிறது. இதில் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் இந்த தொழிலில் ஈடுபடும் தியேட்டர் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து சினிமா தியேட்டர் தொழிலை நம்பியுள்ள ஊழியர்களை உள்பட அனைவரையும் பாதுகாக்க தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தமிழக அரசு நேற்று முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளித்தது.
இந்த அறிவிப்பால் தியேட்டர்கள் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
ரசிகர்கள் ஏமாற்றம்
இந்தநிலையில் தற்போது புதிய படங்கள் எதுவும் இல்லாததால் உடனடியாக தியேட்டரில் படங்களை வெளியிடுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  வருகிற 27-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியிடப்படும் என்றும் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக திருவாரூரில் உள்ள ஒரு தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறினார்.  திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்பட மாவட்டம் முழுவதும் 9 தியேட்டர்கள் உள்ளன. அனைத்து தியேட்டர்களிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் படங்கள் திரையிடப்படும் என்ற நம்பிக்கையில் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றம்  அடைந்தனர். 

Next Story