ஆரணியில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு வீட்டை பூட்டி இளம்பெண்கள் சிறைவைப்பு


ஆரணியில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு வீட்டை பூட்டி இளம்பெண்கள் சிறைவைப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 11:56 PM IST (Updated: 23 Aug 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் கொடுத்த கடனை திரும்ப தராததால் வீட்டை பூட்டி இளம்பெண்கள் சிறைவைக்கப்பட்டனர். இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி காவல் மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி

ஆரணியில் கொடுத்த கடனை திரும்ப தராததால் வீட்டை பூட்டி இளம்பெண்கள் சிறைவைக்கப்பட்டனர். இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி காவல் மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.

கடனை திருப்பி கேட்டார்

ஆரணி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகு, கூலித்தொழிலாளி. இவரது மைத்துனரான கெஸ்டீன் என்கிற ராஜன் (வயது 38) என்பவர் ஆரணி அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். 

இவர் ரகுவுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்த 19 மாதங்களுக்கு முன்பு கடனாக கொடுத்துள்ளார். அதில் ரூ.40 ஆயிரத்தை ரகு திருப்பி செலுத்தியுள்ளார். ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை நீண்ட நாட்களாகியும் கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது சரியாக அவர் பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் நேற்று கெஸ்டீன் என்கிற ராஜன், ரகு வீட்டிற்கு பணம் கேட்க சென்றுள்ளார். அப்போது ரகுவும் அவரது மனைவியும் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் அவர்களது 3 மகள்கள் மற்றும் உறவினரின் மகள் என 4 பேர் மட்டும் இருந்துள்ளனர். 

சிறைவைப்பு

வீட்டில் ரகு இல்லாததால் ஆத்திரமடைந்த கெஸ்டீன், அங்கு இருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் 4 பேரையும் வீட்டில் சிறை வைத்து பூட்டு போட்டு விட்டு சென்றுவிட்டார்.
வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட ரகுவின் மகள்கள், தாய் அஞ்சுகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் இருந்த 4 இளம்பெண்களையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கெஸ்டீன் என்கிற ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story