11 கிராமங்களில் 100 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசி தாலுகாவில் 11 கிராமங்களில் 100 சதவீத மக்கள் கொேரானா தடுப்பூசி போட்டுள்ளனர்.
சிவகாசி,
தமிழகக்தில் அதிக அளவில் தடுப்பூசி போட்ட மாவட்டங்களின் வரிசையில் சிவகாசி சுகாதார மாவட்டம் 5-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
சிறப்பு முகாம்
சிவகாசி நகராட்சி, திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி ஒன்றியத்தில் உள்ள 54 கிராம பஞ்சாயத்துக்களில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும், ரேஷன்கடை ஊழியர்களுக்கும், வீடு, வீடாக கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்களுக்கு தனியாக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி வழங்க தாசில்தார் ராஜ்குமார் ஏற்பாடு செய்தார்.
11 கிராமங்கள்
சிவகாசி சுகாதார மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் முயற்சியால் தற்போது சிவகாசி தாலுகாவில் உள்ள கட்டச்சின்னம் பட்டி, மேலகோணம்பட்டி, சுந்தரராஜபுரம், ராமலிங்காபுரம், குமாரபுரம், காரிசேரி, சேர்வைக்காரன்பட்டி, சானார்பட்டி, சாந்தபிள்ளைபட்டி, ராமசாமிபுரம், மேட்டுப்பட்டி ஆகிய11 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதே போல் சிவகாசியில் பல பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் 2 பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதே போல் பிரபல அச்சகத்தில் பணியாற்றி வரும் 700 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிவகாசி தாலுகாவில் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 107 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்களில் 92 சதவீதம் பேருக்கு சிவகாசி தாலுகாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story