பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி தொடக்கம்


பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி தொடக்கம்
x
தினத்தந்தி 24 Aug 2021 12:28 AM IST (Updated: 24 Aug 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

4 மாதங்களுக்கு பிறகு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி தொடங்கியது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வருகை தந்தனர்.

பரங்கிப்பேட்டை, 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புகழ்பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் நாள்தோறும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் மட்டுமின்றி உள்ளுர் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். சிறிய வாய்க்கால்களுக்கு நடுவே மாங்குரோவ் காடுகளை படகில் சென்று ரசிப்பது, சுற்றுலா பயணிகளுக்கு பேரின்பமாக இருக்கும். அதை விட காடுகளுக்கு நடுவே பறவைகளின் சத்தத்தை கேட்டபடி படகு சவாரி செய்வதும் காதுகளுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும்.

செயல்பட அனுமதி

இதனால் சுற்றுலா பயணிகள் விரும்பி வந்து செல்வார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி பிச்சாவரம் சுற்றுலா மையமும் மூடப்பட்டது. 
இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்தது. அதில், அரசு வழிகாட்டு  நெறிமுறைகளை கடைபிடித்து பூங்காக்கள், சுற்றுலா மையங்கள், கடற்கரைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

பயணிகள் உற்சாகம்

அதன்படி சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் நேற்று முதல் திறக்கப்பட்டது. ஆனால் முதல் நாள் என்பதால் குறைவான எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வருகை தந்தனர். இருப்பினும் அவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் மாங்குரோவ் காடுகளை படகு சவாரி செய்து, உற்சாகத்துடன் கண்டு களித்தனர். 
4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா மையம் திறக்கப்பட்டதால், பயணிகளும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு படகு சவாரி செய்து, மாங்குரோவ் காடுகளை ரசிப்பது, மிகவும் சந்தோஷமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா மையம் மீண்டும் களை கட்ட தொடங்கி உள்ளது.

Next Story