மின்சாரம் பாய்ந்து இளம்பெண் சாவு


மின்சாரம் பாய்ந்து இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 24 Aug 2021 12:35 AM IST (Updated: 24 Aug 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே ஈரத்துணிகளை கம்பியில் காயவைத்தபோது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

குளித்தலை, 
குடும்பத்தகராறு
குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் கல்லுமடை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் சரிகா (வயது 25). இவருக்கும் சுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரிஷிகேஷ்வரன் (4) என்ற மகன் உள்ளான். 
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சரிகா தனது கணவரை விட்டு பிரிந்து தனது தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.
மின்சாரம் பாய்ந்து பலி
இந்தநிலையில் சரிகா நேற்று குளித்து விட்டு, ஈர துணிகளை அவரது வீட்டிற்கும் அருகிலுள்ள மரத்திற்கும் இடையே கட்டப்பட்டிருந்த கம்பியில் காயப்போட்டுள்ளார். அப்போது மரத்தின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்த மின்கம்பி மரத்தில் உரசியுள்ளது. இதனால் மரத்தின் வழியாக மின்சாரம் கசிந்து சரிகா துணி காய போட்ட கம்பியில் பாய்ந்துள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story