ரூ.18¼ கோடியில் உருவான மலை ரெயில் என்ஜின்கள்


ரூ.18¼ கோடியில் உருவான மலை ரெயில் என்ஜின்கள்
x
தினத்தந்தி 24 Aug 2021 1:05 AM IST (Updated: 24 Aug 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பொன்மலை பணிமனையில் ரூ.18¼ கோடி செலவில் உருவான 2 மலை ரெயில் என்ஜின்கள் ஊட்டிக்கு நாளை பயணமாகிறது.

திருச்சி, ஆக.24-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலானது கடந்த 112 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. நீராவியால் இயக்கப்பட்டு வந்த மலை ரெயிலானது சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது.
மலை ரெயிலில் பயணிக்கும்போது நீலகிரியின் இயற்கை எழிலையும், வன விலங்குகளையும், மலைமுகடுகளையும் கண்டு ரசிக்க முடியும். இதனால் அதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.
2 என்ஜின்கள் உருவாக்கம்
இந்த நிலையில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.8½ கோடியில் கோல் பிரெட் எனப்படும் நிலக்கரியால் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் என்ஜினும், அதேபோல ரூ.9 கோடியே 80 லட்சத்தில் பர்னஸ் ஆயில் மூலம் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் என்ஜினும் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டு ஊட்டியை நோக்கி புறப்பட தயாராக உள்ளது.
வெள்ளோட்டம்
இதன் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டு, இரவு-பகலாக தொழில்நுட்ப பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அப்போது சில தவறுகள் கண்டறியப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டு தற்போது 2 ரெயில் என்ஜின்கள் தண்டவாளத்தில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக திருச்சி பொன்மலை பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3,600 பாகங்கள்
இந்த மலை ரெயில் என்ஜினில் சுமார் 3,600 பாகங்கள் உள்ளன. அவற்றில் 1,400 பாகங்கள் பொன்மலை ரெயில்வே பணிமனையிலும், மீதமுள்ள பாகங்கள் தமிழகத்தில் கோவை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாங்கி வரப்பட்டு முற்றிலும் இந்திய தயாரிப்பாக மலை ரெயில் உருவாக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் சொல்கின்றனர்.
ஒரே நேரத்தில் 4,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க், 3.5 டன் எடை நிலக்கரியையும் இதில் எரிபொருளாக எடுத்து செல்ல முடியும். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 4 நீராவி என்ஜின்கள் பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்டு பர்னஸ் ஆயில் மூலம் எரிக்கப்பட்டு நீராவியால் இயக்கப்படுகிறது.
இந்த முறை ரெயில்கள் வண்ணத்திலும் வடிவமைப்பிலும் ஈடு இணை கூறமுடியாத அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் காலங்களில் இதுபோன்ற பல ரெயில்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நன்னாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஜிகு..ஜிகு... பயணம்
பழமையை பறைசாற்றும் வகையிலும், அதே நேரத்தில் தற்போதைய கால சூழலுக்கு ஏற்பவும் இந்த மலை ரெயில் என்ஜின்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக பட்சமாக மணிக்கு 10 முதல் 11 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ஜிகு...ஜிகு... மலை ரெயிலில் பயணிக்கும் பயணிகள், இயற்கை எழிலை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.
நாளை ஊட்டி பயணம்
காண்போரை கவரும் இந்த மலை ரெயில் நாளை (புதன்கிழமை) திருச்சி பொன்மலை பணிமனையில் இருந்து டிரெய்லர் மூலம் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நீலகிரிக்கு தனது கன்னிப்பயணத்தை தொடங்குகிறது.

Next Story