சிவகிரி அருகே சிறுவர் பூங்கா அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
சிவகிரி அருகே சிறுவர் பூங்கா அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு வழங்கினர்.
தென்காசி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல், அங்குள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு ெசல்கின்றனர்.
அதன்படி சிவகிரி அருகே உள்ள தென்மலை இந்திரா நகர் காலனி மக்கள், தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், ‘எங்களது பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அங்கு திருமண மண்டபம், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்து தர வேண்டும். எங்கள் ஊரில் இளைஞர்கள் இணைந்து அரசு இடத்தில் மரம் வளர்த்து பசுமை பூங்காவாக பராமரித்து வருகிறோம். அங்கு மரங்களுக்கு தண்ணீர் ஊற்றும் வகையில் தொட்டி அமைத்து தர வேண்டும். அரசு புறம்போக்கு இடத்தில் பாரபட்சமில்லாமல் இலவச வீடு அமைத்து தர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் வழங்கிய மனுவில், ‘கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 ஊதிய உயர்வுக்கான அரசாணை திருத்தம் செய்து வெளியிட வேண்டும். இவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது பணிக்கொடை ரூ.50 ஆயிரம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கடையத்தில் இருந்து தென்காசிக்கு நடந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். அதில், ‘விவசாயிகள் இடுபொருட்களை எளிதில் வயல்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். ராமநதி, கடனாநதி, ஜம்புநதி ஆகியவற்றின் நீர்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஒழுங்குமுறை நெல் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும். கடையத்தில் எலுமிச்சை, பூக்கள் விளைச்சலின்போது, அவற்றை சேமிக்க குளிர்ப்பதன கிடங்கு அமைக்க வேண்டும். உழவர் சந்தை அமைக்க வேண்டும். கடையத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்த வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.
Related Tags :
Next Story