சொத்து தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு
சொத்து தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் ரெங்கநாதன் (வயது 70). விவசாயி. இவரது தம்பி பஞ்சநாதன் (53). இவர்களுக்கு இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பிரச்சினைக்கு உரிய வயலில் கள்ளி வேலி அமைக்கும் பணியில் பஞ்சநாதன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் (23) ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ரெங்கநாதன், இடத்தை அளந்து எல்லை பிரிப்பதற்கு முன்பு ஏன் வேலி அமைக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதையடுத்து பஞ்சநாதன், விக்னேஷ் ஆகியோர் ரெங்கநாதனை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி, அருகில் கிடந்த கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கநாதனை அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டனர். இதையடுத்து அவரை, உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் ரெங்கநாதன் கொடுத்த புகாரின்பேரில் பஞ்சநாதன், விக்னேஷ் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story