சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
மதுரகாளியம்மன் கோவில்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திங்கள், வெள்ளிக்கிழமை, பவுணர்மி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கடந்த 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார்.
அதன்படி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலிலும் ஒரு வாரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாமல், கோவிலில் ஆகம விதிகளின் படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சுவாமியை வழிபட்டு சென்றனர். இந்நிலையில் தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்தது. 8-ந்தேதிக்கு பிறகு மற்ற கோவில்களை திறக்க உத்தரவிட்ட கலெக்டர், பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் கடந்த 16-ந்தேதி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதித்தார்.
பக்தர்கள் தரிசனம்
மேலும் அரசின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமையன்றும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் தொடர்ந்து மூடப்பட்டு காட்சியளித்தது. இந்நிலையில் 21 நாட்கள் கழித்து திங்கட்கிழமையான நேற்று சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். முன்னதாக பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்ட பிறகே கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டங்களில் அரசின் உத்தரவின்படி கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் நேற்று வழக்கம் போல் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story