நெல்லையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
நெல்லையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
நெல்லை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி நெல்லை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. அங்கு 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவின்பேரில், நெல்லை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. அந்த மையம் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் பணியாற்றி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுவார்கள்.
நள்ளிரவில் தடுப்பூசி போட்டாலும், அவர்களின் விவரங்கள் கணினியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். அதேசமயம் ஏற்கனவே அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தடுப்பூசி போடப்படும். அதன்பிறகு வருகிறவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story