நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
பஸ் வசதி கேட்டு, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர்.
பாளையங்கோட்டை அருகே மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், ‘எங்கள் ஊருக்கு தேவையான பஸ் வசதி செய்து தர வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் முறையாக வேலை வழங்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நெல்லை அருகே குன்னத்தூர் பொதுமக்கள் வழங்கிய மனுவில், ‘குன்னத்தூர் பஞ்சாயத்தில் உள்ள பல தெருக்களில் கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. தற்போது புதிய வீட்டு குடிநீர் இணைப்புக்காக பணிகள் நடைபெறுவதால், சாலைகள் மிகவும் மோசமடைந்து மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. எனவே பழுதடைந்த சாலைகளை உடனே சரிசெய்து தர வேண்டும். புதிய கழிவு நீர் ஓடை அமைத்து தர வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.
புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நெல்சன் உள்ளிட்டவர்கள் வழங்கிய மனுவில், ‘ராதாபுரம் யூனியன் கோட்டை கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கூடங்குளத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கிய மனுவில், அங்குள்ள கோவிலில் வழிபாடு நடத்த தாசில்தார் பிறப்பித்த உத்தரவை மீறி செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
கொரோனா பரவல் நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றிய செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கி நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். பூங்குடையார்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story