நெல்லையில் நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்


நெல்லையில் நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2021 1:59 AM IST (Updated: 24 Aug 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லை:
தங்க நகைக்கடைகளில் விற்பனை செய்யக்கூடிய நகைகளில் ஹால்மார்க் முத்திரையை பதித்து விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய தர நிர்ணய ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய ஹால்மார்க்கின் தர அடையாள எண் ஆக 6 இலக்கம் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. 

புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய, நாட்டின் 256 மாவட்டங்களிலும் தங்கநகை விற்பனையின்போது இந்த தர முத்திரை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் நகை வியாபாரிகள் நகைக்கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில் நேற்று காலையில் நகை வியாபாரிகள் காலை 9 மணி முதல் பகல் 11½ மணி வரை 2½ மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட நகை வியாபாரிகள் கோரிக்கை அட்டைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.  

இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் கொம்பையா பாண்டியன் கூறுகையில், ‘மத்திய அரசு உடனடியாக தரநிர்ணய எண் பதிவு செய்ய வேண்டுமென்ற புதிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று இந்த ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கா விட்டால் இந்த போராட்டத்தை தேசிய அளவில் விரிவுப்படுத்துவோம்’ என்றார்.

இந்த போராட்டத்தில் நெல்லை தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பினர், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் முடிவடைந்த பின் பகல் 11½ மணிக்கு மேல் அனைத்து நகைக்கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம்போல் விற்பனை நடந்தது. 

Next Story