ஊரடங்கில் தளர்வு: 4 மாதங்களுக்கு பிறகு கடலூர் சில்வர் பீச்சில் திரண்ட பொதுமக்கள்
கடலில் நீராடி மகிழ்ந்தனர்
கடலூர்,
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதால், 2 வாரங்களுக்கு ஒரு முறை ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 23-ந் தேதி (அதாவது நேற்று) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந்தேதி காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 23-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்கவும், கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லவும், உயிரியியல் மற்றும் தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படவும் அனுமதி அளித்தது. அதன்படி நேற்று மாலை கடலூர் நகர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொழுது போக்குவதற்காக சில்வர் பீச்சுக்கு படையெடுத்தனர். சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் சில்வர் பீச்சுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கடலில் நீராடி மகிழ்ந்தனர். மேலும் பலர் தங்களது குடும்பத்தினருடன் கடற்கரையில் அமர்ந்து பொழுது போக்கினர். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் சில்வர் பீச் பரபரப்புடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story