தென்காசியில் நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
தென்காசியில் நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தங்க நகைக்கடைகளில் விற்பனை செய்யக்கூடிய நகைகளில் ஹால்மார்க் முத்திரையை பதித்து விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய தர நிர்ணய ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய ஹால்மார்க்கின் தர அடையாள எண் ஆக 6 இலக்கம் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய, நாட்டின் 256 மாவட்டங்களிலும் தங்கநகை விற்பனையின்போது இந்த தர முத்திரை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் நகை வியாபாரிகள் நகைக்கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தென்காசியிலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். நகை வியாபாரிகள் சுவாமி சன்னதி பஜாரில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு தென்காசி நகை வியாபாரிகள் சங்க தலைவர் பெருமாள் நாயுடு தலைமை தாங்கினார். செயலாளர் செய்யது சுலைமான், பொருளாளர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதை வரவேற்கிறோம். ஆனால் மத்திய அரசின் புதிய விதிமுறையால் காலதாமதம் ஏற்படும் சூழல் உள்ளது. இதன் காரணமாக வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு நகைகளை கொடுப்பதில் மிகவும் சிக்கல் ஏற்படும். எனவே இந்த நடைமுறையை மாற்ற உத்தரவிட வேண்டும்’ என்றனர்.
தென்காசி நகரில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகள் உள்பட 200 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடையநல்லூர் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை 2 மணி நேரம் அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் கூறும்போது, ‘ஏற்கனவே பல்வேறு காரணங்களால் தங்க நகை வணிகம் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த ஹால்மார்க் பிரச்சினை இன்னொரு இடியாக தங்க நகை வணிகர்கள் மீது விழுந்துள்ளது. இதனால் சிறிய அளவில் தங்க நகை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமான வணிகர்களும் கடும் பாதிப்புகளை சந்திப்பார்கள். இந்த புதிய விதிமுறை தொழிலை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்’ என்றனர்.
Related Tags :
Next Story