நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை அமல்
நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு: நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
புதிய கல்வி கொள்கை
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதுபோல் கர்நாடகத்திலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பசவராஜ் பொம்மையும், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வந்தார்.
தொடக்க விழா
இந்த நிலையில், கர்நாடக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் தேசிய கல்வி கொள்கை திட்ட தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு தேசிய கல்வி கொள்கையை தொடங்கி வைத்தார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை தொடங்கப்பட்டுள்ளது. இது கல்வித்துறையின் நடைமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தும். இந்த தேசிய கல்வி கொள்கை வெற்றி பெற வேண்டுமெனில், இதை மாநிலத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். கல்வித்துறைக்கு டிஜிட்டல் மிக முக்கியம். அதற்காக நாங்கள் புதிய டிஜிட்டல் கொள்கையை கொண்டு வருகிறோம்.
ஐபேட் வழங்கப்படும்
அனைத்து கிராமங்களிலும் அதிவேக இணைய வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களின் உதவி தேவைப்படுகிறது. தேசிய கல்வி கொள்கையை உருவாக்கியது போல், டிஜிட்டல் கொள்கையும் அமல்படுத்த நீங்கள் (கல்வியாளர்கள்-தொழில்நுட்ப நிபுணர்கள்) உதவி செய்ய வேண்டும்.
பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ‘ஐபேட்' (டிஜிட்டல் முறையில் எழுதும் நோட்டு புத்தகம்) வழங்கப்படும். கலபுரகியில் தொடக்க மற்றும் உயர்நிலை கல்வி கவுன்சில் தொடங்கப்படும். பெங்களூருவில் மட்டும் 180 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த நிறுவனங்களுக்கு மாணவர்களுடன் தொடர்பு இல்லை. அந்த நிறுவனங்களுக்கு மாணவர்களுடன் என்ன தொடர்பு உள்ளது?. அந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் இடையே தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கை
நாங்கள் ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கை ஒன்றை உருவாக்குவோம். இந்த வகையான கொள்கை கர்நாடகத்தில் இல்லாவிட்டால் வேறு எங்கும் உருவாக்க முடியும். தேசிய கல்வி கொள்கையை போல் இந்த கொள்கையும் மிக முக்கியமானது. இந்த ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கை அனைத்து கிராமங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கும் சென்றடையும். இந்த ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கையை அமல்படுத்தும் முக்கிய பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கு உள்ளது.
கன்னடர்கள் அனைவரும் அறிவார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தேசிய கல்வி கொள்கை மூலம் கல்வியில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். நாட்டை பலர் ஆட்சி செய்துள்ளனர். சிலர் மட்டுமே கல்வி நடைமுறையில் அடிப்படை விஷயங்களை மாற்றும் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த தேசிய கல்வி கொள்கை, இந்தியாவை உலக அளவில் தலைமை நிலைக்கு கொண்டு செல்லும்.
மோடியின் தொலைநோக்கு பார்வை
இந்த தேசிய கல்வி கொள்கை, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது. இந்த கொள்கை, பழைய கல்வி முறைக்கு விடுதலை அளிப்பதாக உள்ளது. தற்போது உள்ள கல்வி நடைமுறை குழந்தைகளை வாழ்க்கைக்குள் இழுத்து செல்லும் வகையில் உள்ளது. இந்த கல்வி முறை, அவர்களின் திறனை வெளிப்படுத்தும் ஓவியம் வரைதல், பாடல் பாடுதல், விளையாட்டு உள்ளிட்ட பிற பகுதிக்குள் செல்ல அனுமதிப்பதே இல்லை. இந்த புதிய தேசிய கல்வி கொள்கை, பழைய கல்வி முறையில் இருந்து குழந்தைகளை விடுவிக்கும் வகையில் உள்ளது.
இந்த கல்வி கொள்கையை அமல்படுத்துவது என்பது ஒரு சவாலான விஷயம். ஏனென்றால் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவது எப்போதும் கடினமான விஷயம். இந்த தேசிய கல்வி கொள்கை கர்நாடகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். கர்நாடக அரசு டிஜிட்டல் மற்றும் ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கைகளை அமல்படுத்த உள்ளது. இந்த கொள்கைகள், தேசிய கல்வி கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்த உதவும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
தர்மேந்திர பிரதான்
விழாவில் பேசிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், ‘‘கர்நாடக அரசு தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த தொடங்கி இருப்பதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. 3 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்களை இந்த தேசிய கல்வி கொள்கை உள்ளடக்கியுள்ளது’’ என்றார்.
Related Tags :
Next Story