துப்பாக்கி குண்டு பாய்ந்து போலீஸ்காரர் சாவு; சுத்தம் செய்த போது வெடித்ததால் விபரீதம்


துப்பாக்கி குண்டு பாய்ந்து போலீஸ்காரர் சாவு; சுத்தம் செய்த போது வெடித்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 24 Aug 2021 3:10 AM IST (Updated: 24 Aug 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரே போலீஸ் பயிற்சி மையத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது திடீரென்று துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் குண்டு பாய்ந்து பலியானார்.

சிக்கமகளூரு: தாவணகெரே போலீஸ் பயிற்சி மையத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது திடீரென்று துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை போலீஸ்காரர் குண்டு பாய்ந்து பலியானார்.

ஆயுதப்படை போலீஸ்காரர்

 தாவணகெரே டவுன் ஹரிஹரா ரோட்டில் மாவட்ட போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. இங்கு, ஆயுதப்படை போலீஸ்காரராக சன்னகிரி தாலுகா மாலேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சேத்தன்(வயது 28) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அந்த மையத்தில் சேத்தன் பயிற்சி பெற்று கொண்டிருந்தார். 

இதையடுத்து பயிற்சியை முடித்துவிட்டு சேத்தன், போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள துப்பாக்கிகளை துணியால் துடைத்து சுத்தப்படுத்தி கொண்டிருந்தார். இதேபோல் ஒரு துப்பாக்கியை, துணியால் துடைத்து சுத்தப்படுத்தி கொண்டிருந்தார். அவர், துப்பாக்கியை குண்டு பாயும் முனையை தன்பக்கம் வைத்து சுத்தப்படுத்தி கொண்டிருந்தார். 

 துப்பாக்கி குண்டு பாய்ந்தது

அந்த சமயத்தில் துப்பாக்கி திடீரென்று வெடித்தது. இதனால் துப்பாக்கி குண்டு, சேத்தன் மார்பில் பாய்ந்தது. இதன் காரணமாக சேத்தன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில் துப்பாக்கி சுட்ட சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், ஓடிவந்து பார்த்துள்ளனர். அதில் குண்டு துளைத்து ரத்தவெள்ளத்தில் சேத்தன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேத்தனை, போலீசார் உடனடியாக மீட்டு ஆம்புலன்சில் தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

 சாவு

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சேத்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சேத்தன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே தகவல்அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சேத்தன் உடலை பார்த்து கதறி அழுதனர். 

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கிழக்கு மண்டல ஐ.ஜி. ரவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்யந்த் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கும், சம்பவ இடத்திற்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து தாவணகெரே டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். 

போலீஸ் விசாரணையில், துப்பாக்கிகளை துடைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுடும் பொத்தானை சேத்தன் தொட்டுள்ளார். இதனால் துப்பாக்கி குண்டு பாய்ந்து சேத்தன் பலியானது தெரியவந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு சேத்தன் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சேத்தனின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மாலேஹள்ளி கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

 பரபரப்பு

இந்த சம்பவம் பற்றி கிழக்கு மண்டல ஐ.ஜி.பி ரவி கூறுகையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆயுதப்படை போலீஸ் சேத்தன் இறந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளேன். மேலும் சேத்தனின் குடும்பத்தினருக்கு அரசின் அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார். 
துப்பாக்கி குண்டு வெடித்து ஆயுதப்படை போலீஸ் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story