செங்கோட்டை அருகே தண்டவாளத்தில் மண் சரிவு
செங்கோட்டை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், நெல்லை-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் 5 மணி நேரம் தாமதமாக சென்றது.
செங்கோட்டை:
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக- கேரள மாநில எல்லையான செங்கோட்டை அருகே புளியரையை அடுத்த தென்மலை 4-வது ரெயில்வே குகை அருகில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பாறாங்கற்கள், மண் சரிந்து விழுந்தன.
இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை எடமண் ரெயில் நிலையத்தில் நிறுத்தினர். இதேபோன்று நெல்லையில் இருந்து பாலக்காட்டுக்கு சென்ற ரெயிலை செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தினர்.
தொடர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கற்கள், மண்ணை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் விடிய விடிய ஈடுபட்டனர். சீரமைப்பு பணி முடிந்தவுடன் சுமார் 5 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் புறப்பட்டு சென்றன.
இதனால் பாலக்காட்டில் இருந்து செங்கோட்டைக்கு அதிகாலை 2.30 மணிக்கு வரவேண்டிய ரெயில் காலை 7.30 மணிக்கு தாமதமாக வந்து சென்றது.
இதேபோன்று செங்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்ட பாலக்காடு ரெயிலும் சுமார் 5 மணி நேரம் தாமதமாக அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story