தொப்பூர் அருகே இரவில் கோர விபத்து:கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது- ஒருவர் பலி-4 பேர் காயம்
தொப்பூர் அருகே நேற்று இரவு, விபத்தில் சிக்கி இறந்த பிணத்தின் மீது ஏறி, இறங்கிய கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓமலூர்:
தொப்பூர் அருகே நேற்று இரவு, விபத்தில் சிக்கி இறந்த பிணத்தின் மீது ஏறி, இறங்கிய கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் ஒருவர் சாவு
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தொப்பூர் தீவட்டிப்பட்டி சோதனைச்சாவடி அருகே நேற்று இரவு ரோட்டை கடக்க முயன்ற ஒருவர் மீது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேேய இறந்தார். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் விபத்தில் பலியானவரின் உடலில் அடுத்தடுத்து ஏறி, இறங்கி சென்றன.
இதனிடையே சேலத்தில் இருந்து ஓசூரை நோக்கி சென்ற கார் ஒன்று ரோட்டில் பிணமாக கிடந்தவரின் மேலே ஏறியதில் நிலை தடுமாறியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த கார் அந்த பகுதியில் சாைலயோரம் நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.
கார் தீப்பிடித்தது
மோதிய வேகத்தில் அந்த கார் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தொப்பூர் சோதனைச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் தீப்பற்றி எரிந்த காரில் இருந்த 5 பேரை மீட்க முயன்றனர். ஆனால் அந்த 5 பேரில் ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து விபத்தில் காயம் அடைந்த மற்ற 4 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விபத்தில் தீப்பற்றி எரிந்த கார் முற்றிலும் உருக்குலைந்து விட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிச்சைக்காரர்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தவர் பிச்சைக்காரராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தீப்பிடித்த காரில் பயணம் செய்து இறந்தவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தீப்பற்றி எரிந்து ஒருவர் பலியான சம்பவம் தொப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story