திருவண்ணாமலையில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2021 6:49 PM IST (Updated: 24 Aug 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் தன்ராஜ் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கிவிட்டு தான் புதிய ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே சீரான ஊதியம் பெறுவதற்கு ஏதுவாக மாதிரி ஊதிய நிர்ணய பட்டியல் வெளியிட வேண்டும். 

கொரோனா காலத்தில் பணி செய்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவுக்கு பதிலாக கண் விழித்திரை மூலமாக விற்பனை செய்யும் முறை ஆவணம் செய்ய வேண்டும். 

கூட்டுறவு துறையின் கீழ் பணிபுரியும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் சிக்கன நாணய கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். 

கூட்டுறவு துறையில் நியாயவிலைக்கடையில் விற்பனையாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

இதில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story